ஆலம்பூண்டியில் நடக்க இருந்தபால் உற்பத்தியாளர்களின் போராட்டம் வாபஸ்அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஆலம்பூண்டியில் நடக்க இருந்த பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.
செஞ்சி,
செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதில்லை என்றும், ஆலம்பூண்டியில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதுபற்றி அறிந்த துணை பதிவாளர் ஸ்ரீகலா பால் உற்பத்தியாளர்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி துணை பதிவாளர் ஸ்ரீகலா தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் ஜெயக்குமார், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுபா, துணை பொது மேலாளர் அருணகிரிநாதன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குண்டுரெட்டியார் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்தும், ஆலம்பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதில் உதவி பொது மேலாளர் சுப்புராஜ், முதுநிலை ஆய்வாளர் ஜெயகணேஷ், செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.