செங்குன்றம் அருகே லாரி மீது பால் வேன் மோதி 3 பேர் பலி


செங்குன்றம் அருகே லாரி மீது பால் வேன் மோதி 3 பேர் பலி
x

செங்குன்றம் அருகே முன்னால் சென்ற லாரி மீது பால் வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரிலிருந்து பால் பாக்கெட்டுகளை மினி வேனில் ஏற்றி கொண்டு செங்குன்றம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார்.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் பால் பாக்கெட்டுகளை மினி வேனில் ஏற்றி கொண்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பப்பு பணிக்கர் (32), உஜால் பெஜாரா (26) ஆகியோர் உடன் வந்தனர்.

செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் அம்பேத்கர் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டிரெய்லர் லாரியின் பின்னால் கண் இமைக்கும் நேரத்தில் மினி வேன் மோதியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் பால் வேனில் பயணம் செய்த ராஜேந்திரன், பப்பு பணிக்கர், உஜால் பெஜாரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். முன்னால் சென்ற டிரெய்லர் லாரி நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்களை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து முன்னால் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பால் வேன் லாரி மீது மோதி 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story