அன்னதான இலை கழிவில் இருந்து உரம் தயாரிக்க அரவை எந்திரம்
பழனி முருகன் கோவிலில் அன்னதான இலை கழிவில் இருந்து உரம் தயாரிக்க அரவை எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இங்குள்ள அன்னதான கூடத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு வழங்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு வாழை இலையிலேயே சோறு, சாம்பார், பொரியல் என உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்திய இலை குப்பை மேலாண்மைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் அன்னதான இலை கழிவில் இருந்து நேரடியாக இயற்கை உரம் தயாரிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.14 லட்சத்தில் பிரத்யேக அரவை எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் மலைக்கோவிலில் அன்னதான இலைகளை அரைத்து கூழாக மாற்றி குழாய்கள் மூலம் அடிவாரம் கொண்டு சென்று உரம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக வாங்கப்பட்ட அரவை எந்திரம் மலைக்கோவில் பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.