இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மினி பஸ் டிரைவர் கைது
குளச்சல் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குளச்சல்:
குளச்சல் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தற்கொலை
குளச்சல் அருகே உள்ள லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32), எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சஜிலா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சஜிலா நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்தார்.
ஆனந்த் மற்றும் சஜிலா காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மாலையில் சஜிலா காரியாவிளையில் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைது
இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சஜிலா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் மினிபஸ் டிரைவர் குருந்தங்கோட்டை சேர்ந்த சுபின் (33) தன்னை ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், சஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். அது சுபினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை வெளிநாடு செல்ல வேண்டாம் என்று தொல்லை கொடுத்து வந்ததால் சஜிலா தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சுபின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினார்கள். இதை அறிந்ததும் சுபின் தலைமறைவாகி விட்டார்.
இந்தநிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் சுபின் சுற்றி வந்த போது போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.