கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம்


கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உலக சுற்றுலா தினத்தையொட்டி கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

உலக சுற்றுலா தினத்தையொட்டி கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

மினி மாரத்தான் ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டியும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையிலும் கன்னியாகுமரியில் நேற்று மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் முதல் மகாதானபுரம் வழியாக மீண்டும் ஜீரோ பாயிண்ட் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணி

இதனை தொடர்ந்து திருவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் கடற்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை தூய்மையாக வைத்திட முன்வர வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் பசுமை மாவட்டமாக மாற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தனியார் பங்களிப்புடனும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இங்கு வருகை தந்துள்ள கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், அனைத்து பொதுமக்கள் நமது மாவட்டத்தை குப்பையில்லாத முழு தூய்மையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

மேலும் மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் தலக்குளம் பகுதியை சார்ந்த வேலப்பன் ஆசான் அடிமுறை மற்றும் சிலம்ப விளையாட்டு நடைபெற்றது.

இது தவிர விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் கலாசார முறைப்படி நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சாகர், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், மகேஷ் குமார், உதவி இயக்குனர் (மாசு கட்டுப்பாடு) கலைவாணி, கன்னியாகுமரி பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், உதவி சுற்றுலா அலுவலர் கீதாராணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story