அதிக அளவில் கீற்று மட்டைகளை ஏற்றிச்செல்லும் மினி வேன்கள்


அதிக அளவில் கீற்று மட்டைகளை ஏற்றிச்செல்லும் மினி வேன்கள்
x

அதிக அளவில் கீற்று மட்டைகளை ஏற்றிச்செல்லும் மினி வேன்கள்

தஞ்சாவூர்

பேராவூரணியில் ஆபத்தை உணராமல் அதிக அளவில் கீற்று மட்டைகளை ஏற்றிச்செல்லும் மினி வேன்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீற்று மட்டைகள்

பேராவூரணி பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைமரங்கள் அதிகமாக காணப்படுகிறது. கோடை காலத்தில் அதிக அளவில் கீற்று மட்டைகள் மரங்களிலிருந்து உதிர்ந்து விழும். இந்த கீற்று மட்டைகளை பெண்கள் முடைந்து வெளியூர்களுக்கு மினி வேன்களில் அனுப்பிவைக்கின்றனர்.

ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று வெளியூர் வியாபாரிகள் ஆங்காங்கே கிடைக்கும் 50, 100 மட்டைகளை ஒன்றாக கட்டி மினி வேன்களில் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.

விபத்துகள் ஏற்படும்

அப்போது ஆபத்தை உணராமல் மினி வேன்களில் அளவுக்கு அதிகமாக கீற்றுமட்டைகளை வியாபாரிகள் ஏற்றி செல்கின்றனர். வேன்களில் அதிக அளவில் ஏற்றி செல்வதால் இருபுறங்களிலும் வாகனங்கள் முந்தி செல்லும் போது விபத்துகள் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உரசும் போது எளிதில் தீப்பற்ற கூடும். வேகத்தடைகளில் மினி வேன் ஏறி செல்லும் பொழுதும், வளைவுகளில் வேகமாக செல்லும் பொழுதும், பாரம் தாங்காமல் ஒரு சில நேரங்களில் கவிழும் அபாயம் ஏற்படும். ஆபத்தை உணராமல் செல்லும் டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கண்காணித்து நடவடிக்கை

எனவே இது போன்ற அடர்த்தி மிகுந்த பொருட்களை ஏற்றி செல்லும் போது அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிச்செல்லாமல் குறிப்பிட்ட அளவு எடுத்துச்செல்ல போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும். மினி வேன்களில் அதிக அளவில் பொருட்களை ஏற்றி செல்வதை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story