மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
தாராபுரம், மூலனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள்.
இலவச சைக்கிள் வழங்கும் விழா
தாராபுரம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 12- ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் பல வித திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது இதை பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன்படி தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டிணம், கோவிந்தாபுரம், குண்டடம், ஊதியூர், மூலனூர், கன்னிவாடி, வடுகபட்டி, எலுக்காம்வலசு, கொளத்துப்பாளையம், புதுப்பை பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
மொத்தம் 1827 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா ைசக்கிள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் எம்.வாசுகி, தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் தாராபுரம் நகர செயலாளர் எஸ்.முருகானந்தன், தலைவர் கதிரவன், துணை செயலாளர் வி. கமலக்கண்ணன் முன்னாள் நகர் செயலாளர் கே.எஸ்.தனசேகர், மூலனூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், மூலனூர் தி.மு.க.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், கொளத்து பாளையம் போரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.