ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பில் 46 பள்ளிகளில் புனரமைப்பு பணி- அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்


ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பில் 46 பள்ளிகளில் புனரமைப்பு பணி- அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்
x

ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பில் 46 பள்ளிக்கூடங்களில் புனரமைப்பு பணியை அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பில் 46 பள்ளிக்கூடங்களில் புனரமைப்பு பணியை அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

இணையவழி மருத்துவ சேவை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட மலை பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட கட்டிடங்களை புனரமைக்கும் பணி தொடக்க விழா மற்றும் 'புன்னகை' என்ற இணைய வழி மருத்துவ சேவை தொடக்க விழா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொண்டு பள்ளிக்கூட கட்டிடங்களை புனரமைக்கும் பணியையும், இணைய வழி மருத்துவ சேவையையும் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கூடங்களில் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பள்ளியில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நபார்டு வங்கியின் மூலமாக வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது", என்றார்.

ரூ.1 கோடி

விழாவில் ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் உள்ள 46 பள்ளிக்கூட கட்டிடங்களில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூர் தாலுகா கத்திரிமலைவாழ் மக்களுக்கான 'புன்னகை' என்ற இணையவழி மருத்துவ சேவை மற்றும் கல்வி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து கத்திரிமலை பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இணையவழியில் கல்வி கற்பிக்கும் சேவையையும், புன்னகை என்ற இணைய வழி மருத்துவ சேவையில் கத்திரிமலை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் இணைய வழியில் நோயாளிகளிடம் கலந்துரையாடுவதையும் அமைச்சர் காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டார்.

மேலும், கத்திரிமலையை சேர்ந்த மக்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கலந்துரையாடினார். அப்போது, சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் கேட்டு கோரிக்கை விடுத்தனர். இந்த பணிகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். விழாவில் பர்கூர் ஊராட்சியை சேர்ந்தவர்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் 11 பேருக்கு தனிநபர் குடியிருப்புக்கான ஆணைகளையும், 2 பேருக்கு மண்கரை அமைப்பதற்கான ஆணையையும், வீட்டு குழாய் இணைப்புக்கான ஆணையையும், 4 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன், மாவட்ட வன அதிகாரி கவுதம், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, நபார்டு வங்கி துணை பொதுமேலாளர் சந்தானம், மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story