மொடக்குறிச்சி அருகே சத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
மொடக்குறிச்சி அருகே உள்ள சத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
ஊஞ்சலூர்
மொடக்குறிச்சி அருகே உள்ள சத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களில் அமைச்சர்கள் துறைசார்ந்த மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் துணை கோவில்களான மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை சத்தீஸ்வர கோவில், வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வந்தார். பின்னர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும்
சத்தீஸ்வரர் கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்திருந்த நிலையில் தற்போது திருப்பணிகள் செய்திடும் வகையில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.
இந்து சமயஅறநிலையத்துறை அனுமதி பெற்று மேற்கண்ட கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு்ள்ளது. மேலும் பூஜைகள் மற்ற விழாக்கள் நடத்தவும் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை உடனடியாக மீட்டு கோவில் வருமானத்தை உயர்த்தவும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
அதிகாரிகள்
இந்த ஆய்வின்போது அமைச்சருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (ஈரோடு மண்டலம்) பரஞ்ஜோதி, உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, உதவி கோட்ட பொறியாளர் கா.காணீஸ்வரி, தொல்பொருள் துறை உதவி இயக்குனர் (ஓய்வு) சுப்பிரமணியன், தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்முருகன், கு.சுகுமார் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.