இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழகத்தில் 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
நாமக்கல்:
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர் காக்கப்பட்ட 61 மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் பரிசு வழங்கி கலந்துரையாடினர்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ராமலிங்கம், பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி மன்றத்தை தொடக்கி வைத்தார். பின்னர் கல்லூரி இதழை அவர் வெளியிட்டார்.
அதிக மருத்துவ கல்லூரிகள்
பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டுவர எடுத்த முயற்சியின் காரணமாக தற்போது தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் வந்துள்ளது. தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சீபுரம் மற்றும் பெரம்பலூர் மேலும் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தேவைப்படுகிறது. தற்போது மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது மத்திய அரசின் கொள்கையாகவும் உள்ளது. தமிழகத்திலேய ஒரே மாவட்டத்தில் அதாவது நாமக்கல் மாவட்டத்திற்கு 2 தலைமை அரசு ஆஸ்பத்திரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு 10,450 டாக்டர்கள் வெளியே வருவார்கள். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் புதிய மருத்துவ கல்லூரிகளில் 1,550 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
80 ஆயிரம் பேர்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவ வசதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. "இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48" திட்டத்தில் விபத்தில் சிக்கிய 48 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் உள்ள 640 ஆஸ்பத்திரிகளில், கடந்த 6 மாதத்தில் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் தனி குடிநீர் திட்டத்திற்காக ரூ.9 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8 கோடியில் சுற்றுசுவர் வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், இணை இயக்குனர் (மருத்துவம்) ராஜ்மோகன், துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.