அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அவசியம்


அரசு, தனியார் நிறுவனங்களில்   உள்ளக புகார் குழு அவசியம்
x

பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அவசியம் அமைக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

திருப்பூர்

பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அவசியம் அமைக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

கருத்தரங்கு

பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா நேற்று காலை திருப்பூர் அருகே பழங்கரை அணைப்புதூர் ஐ.கே.எப். மையத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.

இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்துறை இயக்குனர் அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குனர் கார்த்திகா, கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளக புகார் குழு

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

பாலியல் துன்புறுத்தல் புகார்களை அதிகாரபூர்வமாக விசாரிக்க 10 பேருக்கு மேல் (ஆண்கள், பெண்கள் உள்பட) பணிபுரியும் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் நிறுவனமும் அந்தந்த அலுவலகங்களில் 5 பேர் (50 சதவீதம் பெண்கள்) கொண்ட உள்ளக புகார் குழுவை அமைக்க வேண்டும்.

10 பேருக்கு குறைவாக வேலை பார்க்கும் இடங்களில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மீது புகார் அளிக்கும் நிலையில் உள்ளவர்களுக்காக மாவட்ட அதிகாரியான கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான உள்ளூர் புகார் குழுவை அமைக்க வேண்டும். புகார்களை பெறுவதற்காகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அனைத்து வசதிகளையும் உள்ளக புகார் குழுவுக்கு நிறுவன உரிமையாளர்கள் செய்து தர வேண்டும்.

மாற்றியமைக்க வேண்டும்

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளக புகார் குழுவின் தலைமை அதிகாரி மற்றும் உறுப்பினர்களை மாற்றியமைக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி வைக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்கக்கூடாது.

திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் அதிகமாக பணிபுரிவதால் அவர்களின் புகார்களை விசாரித்து உதவும் வகையில் கூடுதலாக ஒன்ஸ் ஸ்டாப் சென்டர் அமைக்கப்படும். 181 மற்றும் 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில், குழந்தைகளுக்காகவும், பெண்கள் பாதுகாப்பிற்காகவும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'திருப்பூர் மாவட்டத்தில் நமது மாநிலத்தில் மட்டும் இல்லாமல் வட மாநிலங்களில் இருந்து அதிகமான தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது.

குறைந்தபட்சம் 10 பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கூட பாதுகாப்பு பெட்டிகள் வைத்து பெண்கள் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.' என்றார்.

உயர்கல்வி உறுதி திட்டம்

அமைச்சர் கயல்விழி பேசுைகயில், "அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவரவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்." என்று கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து புதிய திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை வழங்கி அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சமூக நலத்துறை அலுவலர்களுடன் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 பேருக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள செல்போன்களை அமைச்சர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர் இல.பத்மநாபன், சமூக நலத்துறை அதிகாரிகள் அம்பிகா (திருப்பூர்), சண்முகவடிவு (ஈரோடு), தங்கமணி (கோவை), பிரவீணா (நீலகிரி), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மரகதம் (திருப்பூர்), பூங்கோதை (ஈரோடு), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன், பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story