ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்; 3 அமைச்சர்கள் பங்கேற்பு
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆய்வுக்கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுகூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,000 கோடியும், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.400 கோடியும், சிறப்பு நிதியாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.890 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
எந்தெந்த பகுதிகளில் எவ்வாறான திட்டங்கள் உடனடியாக தேவை என்பது குறித்து மாநகராட்சி மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதோடு, அனைத்து பகுதிகளுக்கும் மழைநீர்வடிகால்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை மேம்படுத்தி நிலத்தடிநீரினை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் பாதாளசாக்கடை திட்டங்களை விரைவாக முடித்திடவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க செய்வதை நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விற்பனை வண்டி
இதையொட்டி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடர்பான தூய்மை உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் நகர்புற உள்ளாட்சிஅமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.77 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில், ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 87 சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகள் துறை ஆணையாளர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன், அந்தியூர் ப.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் மதுபாலன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினிசந்திரா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.