ஈரோடு திரையரங்கில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீடு- அமைச்சர் பங்கேற்பு


ஈரோடு திரையரங்கில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீடு- அமைச்சர் பங்கேற்பு
x

ஈரோடு திரையரங்கில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியிடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு திரையரங்கில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியிடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாமனிதன் வைகோ ஆவணப்படம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பிறப்பு முதல் அவரது தற்போதைய வயது வரையான அரசியல் களம், தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும், ஈழத்தமிழர், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காகவும் அவர் மேற்கொண்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை 80 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படமாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளருமான துரை வைகோ "மாமனிதன் வைகோ" என்ற பெயரில் தயாரித்து இயக்கி உள்ளார். இந்த ஆவணப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறது.

திரையிடப்பட்டது

அதன்படி 28 பகுதிகளில் மொத்தம் 32 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஈரோடு ஆனூர் தியேட்டரில் நேற்று மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மூத்த தலைவர் அ.கணேசமூர்த்தி எம்.பி. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், ஆர்.எம்.பழனிச்சாமி (முன்னாள் எம்.எல்.ஏ.), மக்கள் ஜி.ராஜன், சூரிய மூர்த்தி, கி.வே. பொன்னையன், கணகுறிஞ்சி, வக்கீல் ஈசன், குமரகுருபரன், ஜாபர் அலி, லுக்மானுல் ஹக்கீம், திருச்செல்வம், விஜயபாஸ்கர், விஜயகண்ணா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆவணப்படத்தை பார்த்தனர்.

அமைச்சர் சு.முத்துசாமி

படத்தை பார்த்த பின்னர் முக்கிய பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறி பேசினார்கள். அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-

மிகப்பெரிய ஒரு மனிதன் என்கிற எந்த நினைப்பும் இல்லாமல் வைகோ பழகுவது மகிழ்ச்சியாக இருக்கும். அவரது சாதனைகள் இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டு இருக்கிறது. 80 நிமிடங்களில் சுருக்கமாக தந்து இருக்கிறார்கள். அவரது சாதனைகளை முழுமையாக கூறுவது என்றால் 3 மாதங்கள் தொடர்ந்து இங்கேயே அமர்ந்து பார்க்க வேண்டியது இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரவணைத்துக்கொள்ளுங்கள்

நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும்போது கூறியதாவது:-

3 ஆண்டுகளாக இந்த ஆவணப்படத்தை தயாரிக்கும் பணியை தொடங்கினேன். இந்த ஆவணப்படத்தில், சாதாரண மனிதர்கள் செய்ய முடியாத பல விஷயங்களை தனி மனிதனாக வைகோ சாதித்து காட்டியதை ஆவணப்படுத்தி இருக்கிறோம். அனைத்தையும் இதில் பதிவு செய்ய முடியாது. 80 நிமிடங்கள்மட்டுமே ஓடும் வகையில் இது உள்ளது. ஒரு மாமனிதனாக அவர் சாதித்து காட்டியவற்றுள் சிலவற்றை மட்டுமே பதிவாக்கி இருக்கிறோம். இவை அனைத்தும் ம.தி.மு.க. தொண்டர்கள் நிர்வாகிகளால் மட்டுமே சாத்தியமானது. இந்த நேரத்தில் கூட்டணி கட்சியின் தோழர்களை நான் கேட்டுக்கொள்வது, எங்கள் ம.தி.மு.க. தோழர்களை தேர்தல் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் அரவணைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் கொள்கை விளக்க செயலாளர் வந்தியத்தேவன் தொகுத்து வழங்கினார். முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.


Next Story