ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- கோபியில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்று கோபியில் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
கடத்தூர்
ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்று கோபியில் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சமுதாய கூடம்
கோபியை அடுத்துள்ள அயலூர் சமத்துவபுரம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 100 வீடுகள் பழுது நீக்கி பராமரிக்கப்பட்டது. சமுதாய கூடம், மேல்நிலை குடிநீர் தொட்டி பழுது நீக்குதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை நேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கண்டு கொள்ளவில்லை
சமத்துவபுர திட்டம் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட கனவு திட்டம். சாதி, மத மோதல்களை தவிர்த்து அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழவேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் 238 சமத்துவபுரங்கள் உள்ளன.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் ஏற்கனவே இருந்த சமத்துவபுரங்களை சீரமைக்க உத்தரவிட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் சமத்துவபுரங்களை கண்டு கொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சமத்துவபுரங்களை சீரமைக்க 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து பராமரிக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
காலி பணியிடங்கள்
கடந்த ஆட்சியில் விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்த சமத்துவபுரங்களை முதல்-அமைச்சரே பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளார்.
திருவள்ளூர், திருச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
10 ஆண்டு காலமாக திரும்பி கூட பார்க்காத பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
மீண்டும் வேலை
துறை வாரியாக காலி பணியிடங்களை கணக்கிட்டு, அதை நிரப்புவதற்கு கடும் நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். 10 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. முறையாக செய்து இருந்தால் இவ்வளவு காலி பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சி வந்ததோ அப்போதெல்லாம் மக்கள் நலப்பணியாளர்களின் பணி பறிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் ரூ.7500 சம்பளத்தில் மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உடன் இருந்தார்.