ரூ.1¾ கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்


ரூ.1¾ கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்
x

வெள்ளகோவிலில் நடந்த விழாவில் 103 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

திருப்பூர்


வெள்ளகோவிலில் நடந்த விழாவில் 103 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

கடன் தள்ளுபடி சான்றிதழ்

வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.

இதில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 பேருக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பில் 3 பேருக்கு பேட்டரி வீல் சேர், 9 பேருக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 பேருக்கு வழங்கினார்.

ரேஷன் கடை திறப்பு

முன்னதாக வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.

விழாவில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி முத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story