அமராவதி முதலைப்பண்ணையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
உடுமலையை அடுத்த அமராவதி முதலைப்பண்ணையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலையை அடுத்த அமராவதி முதலைப்பண்ணையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
முதலைப்பண்ணை
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் 22 பெண் முதலைகள் உட்பட 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதலைப் பண்ணையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் அமராவதி பகுதிக்கு வருகை தந்தார்.
அவருக்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் (கூடுதல் பொறுப்பு) உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் உள்ளிட்ட வனத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு மேம்படுத்தப்பட்ட தொட்டியை அமைச்சர் திறந்து வைத்து முதலைக்குட்டியை தண்ணீரில் விடுவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்.
அமைச்சர் ஆய்வு
மேலும் வனக்குழுவை சேர்ந்த கரட்டுப்பதி மலைவாழ் மக்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கினார். திருப்பூர் வனக்கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 வாகனங்களை வனச்சரக அலுவலர்களுக்கு வழங்கினார். இதையடுத்து முதலைப்பண்ணையில் மரக்கன்றுகளை அமைச்சர் நடவு செய்தார். பின்னர் முதலைப் பண்ணையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-
வருவாய் அதிகரிப்பு
முதலைப்பண்ணையில் கூடுதல் பணிகள் மேற்கொள்வது மற்றும் சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈர நிலங்களை காப்பாற்றுவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. முதலைப்பண்ணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலை பண்ணைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 45 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். இதன்மூலம் வருவாய் அதிகரித்துள்ளது. வனம், வனத்தின் தன்மை அதில் வசித்து வருகின்ற வனவிலங்குகள் மகத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. இரா.ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி, உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் என்கின்ற மெய்ஞான மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார், வனச்சர அலுவலர்கள் சிவக்குமார், சுரேஷ்உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.