வணிகர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி- ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் பேச்சு
வணிகர்களுக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்று ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் கூறினர்.
வணிகர்களுக்கு 'திராவிட மாடல்' ஆட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்று ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் கூறினர்.
வணிகர் மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது விக்கிரமராஜா ஒரு முக்கிய கோரிக்கை வைத்தார். அப்போது சிறு வியாபாரிகள் வணிக உரிமம் பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்களின் ஒப்புதல் அவசியமாக இருந்தது. இதனால் கட்டிட உரிமையாளர்கள் அதிக வாடகை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த உரிமம் பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்களின் ஒப்புதல் தேவையில்லை என்று அறிவிக்கக்கோரி கேட்டு இருந்தார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதுடன், மண்டலங்கள் வாரியாக முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பம் கொடுத்தவுடன் உரிமம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த மாநாட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்க போலீசாரின் தடையின்மை சான்று பெறும் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். வணிகர்கள் நல வாரியம் சார்பில் இறப்பு இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தீ விபத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்த ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மெட்ரோ பணிகள், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கும் இடங்களில் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்து இருக்கிறார்.
ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு உறுதுணையாக இருக்கும் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாமை நடத்தி வணிகர்களிடம் விளக்கம் அளித்து உள்ளார்.
நான் பல்வேறு தொழில்களை தொடங்கி நடத்தினேன். ஆனால் அந்த தொழில்கள் தற்போது நடக்கிறதா? என்று கேட்டால் இல்லை. டாக்டர்கள், வக்கீல்களாக உருவாகிவிட முடியும். ஆனால் கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சிறந்த வணிகராக உருவாக முடியும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கட்டிட வரைமுறை
அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மின் கட்டண உயர்வு
அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-
வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம். எல்லாருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
நிர்வாகிகள் அறிவிப்பு
அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மதுரை, திருநெல்வேலி, சென்னை, வேலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு குறைகள் கேட்கப்பட்டன. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களைபோன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வணிக வரி அலுவலகத்தில் புகார் பெட்டி திட்டம் புதிதாக கொண்டு வரப்பட்டது. இதன்மூலமாக கோரிக்கைகளை வணிகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்கள். அவர்களது கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய பதிலும் தெரியபடுத்தப்படும்.
வணிகர் நல வாரியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 47 ஆயிரத்து 299 உறுப்பினர்கள் இருந்தனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 180 ஆக 2 மடங்கு உயர்ந்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோல் திருமண உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி ேபசினார்.