தகுதியானவர்கள் என்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


தகுதியானவர்கள் என்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியானவர்கள் என்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர்

மகளிர் உரிமைத்தொகை

திருப்பத்துார் மாவட்டத்தில் நடந்து வரும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஆய்வு செய்த அவர், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாடப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது விண்ணப்பித்த பெண் பயனாளியிடம் அவரது பெயர், படிப்பு, கணவர் என்ன செய்கிறார், இந்த ஆயிரம் ரூபாய் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என கேட்டு, அவருடைய ஆதார் கார்டு, மற்றும் ரேஷன் கார்டை ஆய்வு செய்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க.தேவராஜி, வில்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

அமைச்சர் விளக்கம்

தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதன்படி முதல்-அமைச்சரானதும் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பதற்காக, இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணம் தகுதியானவர்களுக்கு செல்ல வேண்டும்.

இந்தப் பணிகள் 2 கட்டமாக நடக்கிறது. கிடைக்காதவர்களுக்கு 3ம் கட்டம் நடக்க வாய்ப்புண்டு. இதில் தகுதியானவர்கள் என்பதை நான் திரும்ப, திரும்ப சொல்வதற்கு காரணம், என் மனைவி சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, என் கணவர் அமைச்சர். அதனால் எனக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வேண்டும் எனக் கேட்டால் நியாயமா?. அதே போல இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் ஆகியோரின் மனைவிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கேட்டால் நியாயமாகுமா?.

அதற்காகத்தான் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை என்பதை நாங்கள் கூறி வருகிறோம். தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை சென்று சேர வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதற்கான பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. இதற்கு முழு காரணம் முதல்-அமைச்சர்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தாசில்தார் சிவப்பிரகாசம், பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், துணைத்தலைவர் டி.ஆர். ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story