பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் ஆய்வு
பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நேற்று மதியம் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிாியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் இருந்து அருமடல் வரை 3 கி.மீ. தூரத்திற்கு ஒருவழித்தடமாக இருந்த சாலையை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறையால் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு சாலையை பார்வையிட்டு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.