நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக வருகை தர உள்ளார்.

வருகிற 8-ந் தேதி மாலை திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் புதிதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயில் மற்றும் அதன் அருகில் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையையும் முதல்- அமைச்சர் திறந்து வைக்கிறார்.

பின்னர் ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையானது 3 அடி தளத்துடன் 10½ அடி பீடத்தில் 9 அடி உயரம் கொண்ட வெண்கலத்தினாலான சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

9-ந் தேதி காலை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் ஆய்வு

இதைமுன்னிட்டு இன்று காலை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் கட்சி பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட உள்ள பந்தல் குறித்தும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பந்தல் அமைக்கும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

அப்போது பணிகளை தொய்வின்றி வருகிற 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன்,

நெடுஞ்சாலைத்துறை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story