கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லையா? நிதி அமைச்சரின் கருத்துக்கு, இ.பெரியசாமி பதில்
கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லையா? என்று நிதி அமைச்சரின் கருத்துக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பதில் அளித்தார்.
கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லையா? என்று நிதி அமைச்சரின் கருத்துக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பதில் அளித்தார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல்லில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல் மாநிலம்
கூட்டுறவு துறை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக திகழ்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் வேகமாக செயல்படுகிறது. இதுவரை ரூ.7,200 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.900 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொடர்ந்து கடன் வழங்கும் பணி நடக்கிறது. சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணி திண்டுக்கல்லில் தொடங்கி இருக்கிறது. கோவையில் நாளை தொடங்கும்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து ரசீது வழங்கப்படும். மேலும் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிகபட்ச கடன் வழங்க இருக்கிறோம். இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கூட்டுறவுத்துறை கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை இருப்பு வைத்து கொண்டு, எந்த மாநிலத்திலும் விற்கும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. கம்பு, சோளம் உள்பட எந்த பொருளையும் இருப்பு வைக்கலாம். இதற்காக இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து மத்திய அரசு கேடயம் வழங்கி இருக்கிறது.
ரூ.35 ஆயிரம் கோடி கடன்
கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் தலைமை வங்கி, முதன்மையான வங்கி என்ற பரிசை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் உள்பட ரூ.35 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்டும் அதிக அளவில் வந்துள்ளது. அந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் எந்த வங்கியிலும் கடன் பெறலாம் என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மாநில அளவிலான விழாவில் இது குறித்து அறிவிப்பு வரஇருக்கிறது.
மேலும் கூட்டுறவு ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு இருக்கின்றனர். அதற்கான நிதியை அரசிடம் எதிர்பார்க்காமல், லாபத்தில் இருந்து மாத ஓய்வூதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதற்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். மாநிலம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன்கடைகள் இருக்கின்றன. எங்கு தவறு நடந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். அதுவும் வெளிப்படை தன்மையோடு, தகுதியின் அடிப்படையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறியதாவது:-
மக்களும், முதல்-அமைச்சரும் திருப்தி
வெளிப்படை தன்மையில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். குறைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கு, என்ன நடந்தது என்று கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். எங்கே தவறு நடந்தது? என்று அவரிடம் கேளுங்கள். மக்கள் திருப்தி அடைவதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். 7 கோடி மக்களும், முதல்-அமைச்சரும் திருப்தி அடையவேண்டும். அதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்.
வேறு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் 50 ஆண்டு கால அரசியலில் இருக்கிறேன். இவர் (அருகில் இருந்த அமைச்சர் அர.சக்கரபாணியை காண்பித்து) 35 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறார். தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் வேலை. நாங்கள் மக்களின் வேலைக்காரர்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். மக்களுக்கு திருப்தி ஏற்பட வேண்டும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ரேஷன்கடையை தெரியாதவர்கள்
ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இருக்கின்றனர். நாங்கள் யாரிடமும் பாகுபாடு பார்த்தது இல்லை. கூட்டுறவு என்பது மக்களுக்கான இயக்கம். கூட்டுறவுத்துறை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. உணவுத்துறையும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான். இந்த துறைகளில் எங்கேயாவது குறை இருக்கிறது என்று கூறினால் உங்களை மாலை போட்டு வரவேற்று, குறைகளை சரிசெய்து திருப்திபட்டு கொள்வோம்.
மக்கள் தான் திருப்தியை பற்றி கூறவேண்டும். ஒருவேளை ரேஷன்கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என்பதை பற்றி கவலையில்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. மக்களும், முதல்-அமைச்சரும் திருப்தியாக இருக்கின்றனர். பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தோம். திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறோம். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று செய்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.