கேரளா அரசிடம் பேசி சிறுவாணி விவகாரத்தில் உரிய நடவடிக்கை -அமைச்சர் துரைமுருகன் உறுதி


கேரளா அரசிடம் பேசி சிறுவாணி விவகாரத்தில் உரிய நடவடிக்கை -அமைச்சர் துரைமுருகன் உறுதி
x

சிறுவாணி அணை விவகாரத்தில் கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முக்கியமான பிரச்சினை. இதை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

நடவடிக்கை

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது குடிநீர் ஆதார பிரச்சினை. சிறுவாணிக்கு வரும் தண்ணீரை அணை கட்டினால் தண்ணீர் வராது. எனவே அணை கட்டப்பட்டால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். சிறுவாணி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளா அரசு 70 மில்லியன் கனஅடி வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் நானே நேரில் சென்று கேரளா அரசை வலியுறுத்தி நல்ல தீர்வை பெற்று தருவேன் என்றார்.


Next Story