வல்லநாடு நீரேற்று நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு


வல்லநாடு நீரேற்று நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு குடிநீர் வரக்கூடிய வல்லநாடு நீரேற்று நிலையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு குடிநீர் வரக்கூடிய வல்லநாடு நீரேற்று நிலையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட மாநகராட்சியில் சில பகுதிகளுக்கு தினமும், மற்ற பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் என குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால், மாநகராட்சிக்கு வரும் குடிநீரின் அளவும் குறைந்து உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு தினமும் 62 எம்.எல்.டி குடிநீர் தேவை. ஆனால், தற்போது 20 முதல் 25 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் ஒரு வாரத்துக்கு ஒரு முறை என்ற அளவிலேயே குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது. எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி கோடை காலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் வல்லநாடு கலியாவூர் நீரேற்று நிலையம் பகுதியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள நீரேற்றும் அறை, நீர் உறிஞ்சு கிணறு ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர், கூடுதல் தண்ணீர் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர் பாண்டியன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அமைச்சர் நேரு நாளை வருகை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நாளை (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

9 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு வாகன காப்பகம், நகர்ப்புற சுகாதார மையங்கள், காந்திநகர், கதிர்வேல்நகர், ராஜகோபால்நகா், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள போக்குவரத்து பணிமனை ஆகியவற்றின் திறப்பு விழா புதிய பஸ்நிலையம் அருகே உள்ள போக்குவரத்து பணிமனை வளாகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிகளில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story