தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி -அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
சித்திரை திருவிழா
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொருட்காட்சியை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வையிட்டார். கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர்கள் தமிழ் செல்வராஜன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியை சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 213-வது அரசுப் பொருட்காட்சியாகும். இந்த பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் என ஜூன் மாதம் 13-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களான ஆவின், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் மூலம் 3 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு வருவாய்
இந்த ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, கோவை என 5 முக்கிய நகரங்களில நடத்தப்பட்ட அரசு பொருட்காட்சிகளை 7 லட்சத்து 42 ஆயிரத்து 150 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம் ரூ.3 கோடியே 7 லட்சத்து 46 ஆயிரம் வருவாய் அரசுக்கு ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரையில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்வையிட்டு, அரசுக்கு ரூ.54.33 லட்சம் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. பொருட்காட்சியின் மூலம் அரசுக்கு வருவாய் என்பது நோக்கமல்ல, அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும்.
மேலும், செய்தித்துறையின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெருந்தலைவர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் தியாகங்களை போற்றும் விதமாக மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவுத் தூண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சிலைகள்
அந்த வகையில், மதுரை மாநகரில் பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அவரது திருவுருவச்சிலை அமைக்கப்பட உள்ளது.
சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பெருந்துணையாக நின்ற வீரமங்கை குயிலிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிலை, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரரான மாவீரன் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு ரூ.50 லட்சம் செலவில் சிலை, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மன்னர் பூலித்தேவர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவரும் சுதந்திர போராட்ட வீரருமான வென்னி காலாடி நினைவை போற்றும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் அவருக்கு சிலை, அரியலூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமிக்கு ரூ.3 கோடியில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கரிசல் இலக்கிய எழுத்தாளர் ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நினைவரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் ஆகியோருக்கு மார்பளவு சிலை சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவகங்கள், மணிமண்டபங்கள், சிலைகள் தொடர்பான தகவல்களை இன்றைய இளைஞர்கள் எளிதில் தெரிந்து பயன்பெற ஏதுவாக விரைவு துலங்கள் குறியீடு (QR CODE) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 275 மகளிருக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிதியுதவியும், ரூ.1 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தலா 8 கிராம் தங்கம் வீதம் 2,200 கிராம் தங்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 8 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக சிறப்பாக செயல்பட்ட 9 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு "மணிமேகலை விருது" மற்றும் ரூ.4 லட்சம் செலவில் ஊக்கத்தொகை என மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.