கொரோனா தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனைகளில் வழங்க நடவடிக்கைதிருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் ஆய்வு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அவர் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னே தமிழக அரசு விமான நிலையங்களில் கொரோனா சோதனையை ஆரம்பித்தது. குறிப்பாக சீனா, ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் உத்தேச (ரேண்டம்) முறையில் 2 சதவீதம் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ஜப்பான், சீனா, ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளை 100 சதவீதம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி இருந்தார். தற்போது 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் 22 ஆயிரத்து 969 பயணிகள் வந்துள்ளனர். அதில் 533 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ரத்த மாதிரிகள்
நேற்று (நேற்றுமுன்தினம்) சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த 2 பணிகளுக்கு பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, அது எந்த வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் என ஆராய சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு கம்போடியாவில் இருந்து வந்த ஒரு பயணிக்கும், துபாயில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர். மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகத்தில் புதிய கலாசாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவது. அதை ஒரு தொழிலாகவே பலர் செய்து வருகின்றனர்.
இது போன்ற கலாசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக...
தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பு உள்ளது. 60 வயது தாண்டியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கிறது. அதனை அரசு மருத்துவமனைகளில் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா நோய் தடுப்பு மருந்து தமிழக அரசு மருத்துவமனைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.