நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490க்கும் மேற்பட்ட நகரங்களில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தேசிய அளவில் 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 95,823 மாணவிகளும், 51,757 மாணவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 47,581 மாணவர்களும் எழுதினர்.

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சௌந்தர்யா என்ற வரிசையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் செல்வன் பரமேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் மாணவர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசினார். விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மனநல ஆலோசனைகள், மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"தமிழகத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்" என்று கூறினார்.


Next Story