ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். அவரை சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, துணை இயக்குனர் வரதராஜன், நகர்நல அலுவலர் அரவிந்த், கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்ரதி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பண்ணைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் மகப்பேறு சிகிச்சை வசதி செய்துதர வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பிறகு மேல்மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர் மற்றும் பூம்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். அத்துடன் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தேவையான ஆம்புலன்ஸ் சேவை மற்றும் கூடுதல் வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.