பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 293 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்- அமைச்சர் மூர்த்தி வழங்கினார்


பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 293 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்- அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
x

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 293 மாணவர்களுக்கு சைக்கிள்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

மதுரை


பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 293 மாணவர்களுக்கு சைக்கிள்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

பாராட்டு

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தனது சொந்த நிதியில் இருந்து அமைச்சர் மூர்த்தி சைக்கிள்களை வழங்கினார். மொத்தம் 46 பள்ளிகளைச் சேர்ந்த 293 பேர் சைக்கிள்கள் பெற்றனர். அதற்கான விழா, யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழை மாணவ-மணவிகள் அரசு பள்ளிகளின் தான் படிக்கின்றனர். எனவே அந்த மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது அவசியம். அந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல வேலை வாய்ப்பை பெறும் போது அவர்களது குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து விலகி விடும். எனவே அரசு பள்ளியில் மாணவர்கள் சிறப்பாக படிப்பதற்கு ஏற்ற நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி நன்றாக படிக்க வைக்க வேண்டும்.

சேவை மனப்பான்மை

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியினை கடமை உணர்வோடு மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மையோடு செய்ய வேண்டும். ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கு அடித்தளமிடுவதே அரசு பள்ளி ஆசிரியர்கள் தான். நன்றாக படிக்கும் அரசு மாணவர்களை நாம் தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும். அந்த வகையில் தான் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குபட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எனது சொந்த நிதியில் இருந்து மிதிவண்டிகளை வழங்கி உள்ளேன். அடுத்த ஆண்டும் இதே போல் வழங்குவேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். இந்த யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு கோரிக்கை வைத்துள்ளனர். நபார்டு தீட்டத்தின் கீழ் 10 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story