தொழிலாளர்களுக்கு விடுபட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


தொழிலாளர்களுக்கு விடுபட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x

தொழிலாளர்களுக்கு விடுபட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

கோவை,

தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குடிநீர் திட்டப்பணிகள் ஆய்வுக்காக வந்திருந்த அமைச்சர் நேருவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் ரூ.13 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரத்து 250 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது கூறியதாவது:-

சாலைக்கு வந்து போராடவில்லை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர் நலனில் தனி அக்கறை செலுத்தி வருகிறார். அதனால் தான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொழிலாளர்கள் சாலைக்கு வந்து எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அந்த அளவுக்கு உதவிகள் செய்யப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு நீண்டநாட்களாக விடுபட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமண உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்து இழப்பு நிவாரண நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உடனடியாக 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் 57 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அடுத்த கட்டமாக நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

தீர்வு காணப்படாத பிரச்சினைகள்

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தீர்வு காணப்படாத பிரச்சினைகள் 25 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விடுபட்ட தொகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காவிட்டால் உடனடியாக அணுகலாம். தொழிலாளர் துறை அதிகாரிகளும் பல உதவிகளை தேடிச்சென்று வழங்கி வருகிறார்கள். இது தொழிலாளர்களுக்கான ஆட்சி, தொழிலாளர்களும் இந்த நன்றியை மறக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story