திருச்சியில் ஆயுர்வேதம், பல் மருத்துவக்கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருச்சியில் ஆயுர்வேதம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சியில் ஆயுர்வேதம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உணர்வு ஒருங்கிணைப்பு-சிகிச்சை பூங்கா
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா ரூ.12 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான தொடு உணர்வு அதிகரிக்கும் வகையில் பல வடிவங்கள் கொண்ட நடைபாதை, ஊஞ்சல், சறுக்கு, ஒலி எழுப்பும் தகடுகள், நுண்ணறிவு வரைபடம் ஆகியவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் குழந்தைகளுக்கு புலன் ஒருங்கிணைப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த பூங்கா திறப்பு விழா மற்றும் அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடியதீவிர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்யும் நிகழ்ச்சி, ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சலவை எந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று காலை திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை பூங்காவை திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
பல் மருத்துவக்கல்லூரி
திருச்சியில் காதுகேட்காத 82 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து தற்போது காது கேட்கும் திறன் பெற்றுள்ளனர். கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு விவகாரத்தில் 2 டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் 5 ஆயிரத்து 430 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் கையேடுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கிட்டதட்ட 9,500 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
திருச்சியில் அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சரின் ஒப்புதலை பெற்று அடுத்த நிதிநிலை அறிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சென்டர் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்தில் 708 நகர் நலவாழ்வுமையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சியில் 36 நகர் நலவாழ்வு மையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, "அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சிக்கு 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை கொடுத்துள்ளார். திருச்சிக்கு அரசு பல் மருத்துவகல்லூரி வேண்டும். அதை நிதிநிலை அறிக்கையில் மட்டும் சேருங்கள், நிதியை நான் முதல்-அமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.
விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி., கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
துறையூர்-முசிறி
இதேபோல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் துறையூர் அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். மேலும் ரூ.61.65 லட்சம் மதிப்பீட்டில் 6 டயலிஸிஸ் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
இதேபோல் முசிறியை அடுத்த ஏவூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.யுமான காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார்(துறையூர் ), கதிரவன்(மண்ணச்சநல்லூர்), பழனியாண்டி(ஸ்ரீரங்கம்), துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், துறையூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வேல்முருகன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நடைபயிற்சியின்போது வீடு, வீடாக ஆய்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சியில் நேற்று அதிகாலையில் 12 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயிற்சி சென்றார். அப்போது உத்தமர்சீலி கிராமத்துக்கு திடீரென சென்ற அவர் அங்கு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு குறித்தும், வீடுகளில் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து பெட்டகம் கிடைத்ததா? என்றும் கேட்டார். பின்னர் அங்குள்ள சித்த மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளின் வருகை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். அமைச்சர் திடீர் ஆய்வுக்கு வந்ததை எதிர்பார்க்காத கிராம மக்கள் அவரை வரவேற்று மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.