அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்


அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை, திருப்பத்தூர் பகுதிகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

மானாமதுரை, திருப்பத்தூர் பகுதிகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

தொழில்நுட்ப மையம்

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அமராவதிபுதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட உள்ள தொழில்நுட்ப மைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- எதிர்கால சந்ததியினர் தரமான கல்வியினை தொழில் திறன் சார்ந்து பெற வேண்டும். தொழில் சார்ந்த படிப்புகளில் தகுதியையும், திறமையும் மேலை நாடுகளுக்கு இணையாக தரமான முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் புதிய பாடப்பிரிவுகளின் கீழ் நவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மைய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

மானாமதுரை, திருப்பத்தூர்

அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தம் 71 மையங்கள் தலா ரூ.3 கோடியே 73 லட்சம் வீதம் மொத்தம் ரூ.264 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், அதில் ஒரு மையத்திற்கு ரூ.40 கோடியே 50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2877 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் நவீன எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

சிவகங்கை, காரைக்குடியை தொடர்ந்து மானாமதுரை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளிலும் விரைவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கிட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறப்பான பயிற்சி

நவீன புதிய தொழில்நுட்பத்துடன் தொழிற்சார்ந்த கல்வியை கற்பதற்கு மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி சிறப்பான பயிற்சியினை பெற்று பொருளாதார ரீதியாக வீட்டிற்கும், நாட்டிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமணன், காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் குமரேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நாகனி செந்தில்குமார், சாக்கோட்டை யூனியன் ஆணையாளர் ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப.சின்னதுரை, ஒன்றிய குழு உறுப்பினர் சொக்கலிங்கம், அமராவதிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, ஊராட்சி செயலாளர் உடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story