வீரர்-வீராங்கனைகளுக்கு அமைச்சர் பாராட்டு
மாநில ரோல்பால் போட்டியில், சாதனை படைத்த திண்டுக்கல் மாவட்ட அணியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
11 வயதுக்குட்ப்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு மாநில அளவிலான ரோல்பால் போட்டி தஞ்சாவூரில் 2 நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில், சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவிகள் பிரிவில் முதலிடத்தையும், மாணவர்கள் பிரிவில் 3-ம் இடத்தையும் பிடித்து கோப்பையை கைப்பற்றினர். மாநில ரோல்பால் போட்டியில், சாதனை படைத்த திண்டுக்கல் மாவட்ட அணியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று சின்னாளப்பட்டிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், சர்வதேச நடுவர் பிரேம்நாத், பயிற்சியாளர்கள் வெங்கடேசன், கலையரசன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.