ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
ராணிப்பேட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் துறை
இந்த ஆட்சியை உலகமே பாராட்டுகிறது. நீங்கள் (மு.க.ஸ்டாலின்) ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையையும் உங்கள் கைவசம் வைத்துக் கொண்டீர்கள். இதுதான் உங்களின் பெயரை சொல்கிறது.
ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளை அரசு நிகழ்ச்சியாக கொண்டு வந்தீர்கள். கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கிராமம் விடாமல் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். நலத்திட்ட உதவிகள் கொடுத்தோம். குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கினோம். அது மட்டுமில்லாமல் அரசு அதிகாரிகளிடம் சொல்லி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் என்னென்ன குறை உள்ளது, முதல்-அமைச்சர் குறைகளை நிவர்த்தி செய்ய தயாராக உள்ளார் என மனுக்களை வாங்கினோம்.
தேர்தலுக்கு முன்பு 'உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்' எல்லாரிடமும் என்ற திட்டத்தில் மனுக்கள் பெற்று இதே மேடையில் பெட்டியில் போட்டு சீல் வைத்தோம். நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் குறைகளை நிவர்த்தி செய்வேன் எனக் கூறினீர்கள். யாரும் நம்பவில்லை. ஏன் நானே நம்பவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் நிறைவேற்றினீர்கள். பொதுமக்களிடம் உங்கள் மீது நம்பிக்கை வந்து விட்டது.
மக்களாட்சி
இது தி.மு.க. ஆட்சி அல்ல, மக்களாட்சி, நமது ஆட்சி. எங்களுக்கு எல்லாம் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. ஒரு கொடி கூட கட்ட முடியவில்லை. நீங்கள் முதல்-அமைச்சர், இது அரசு நிகழ்ச்சி, மேடையில் கூட உங்கள் போட்டோ இல்லாது இருந்தால் எப்படி, நாங்கள் என்ன சொல்வது. தொண்டன் மனதில் ஏக்கமாக உள்ளது.
நான் 1987-ல் லெதர் கம்பெனி ஒன்று ஆரம்பித்தேன். அதில் கணக்காளராக கேத்தரினா என்ற பெண் பணிபுரிந்தார். அவரது கணவர் வங்கியில் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தை ஒன்று இருந்தது. அப்போது வேலை செய்பவர்களும், நாங்களும் ஒரே குடும்பமாக இருந்தோம். கேத்தரினாவுக்கு சேவை மனப்பான்மை மிகவும் அதிகம். அந்தப்பெண் என்னிடம் எனது குழந்தை போன்று நிறைய குழந்தைகள் உள்ளது. அவர்களுக்கு என ஒரு பள்ளி தொடங்கலாம் என கூறினார்கள்.
விஸ்வாஸ் பள்ளி
அதைத்தொடர்ந்து 1993-ம் ஆண்டு விஸ்வாஸ் என்ற பள்ளியை வீட்டில் தொடங்கினோம். 1996-ம் ஆண்டு கலைஞர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அங்கு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை பார்த்த கலைஞர், இப்பள்ளிக்கு தனியாக கட்டிடம் இருக்கிறதா? என்றார். இல்லை என்றேன். உடனடியாக அதிகாரியை அழைத்து 5 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்து கொடுங்கள் என்றார்.
அதை நான் வீட்டில் கூறியதும், நமது ஆட்சி இல்லை என்றால் இடத்தை திரும்ப வாங்கிக் கொள்வார்கள். நமக்கு ஒரு ஏக்கர் போதும் என்றார்கள். நாங்கள் தற்போது வரை பள்ளியை நடத்தி வருகிறோம்.
அங்குள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என தெரியாது. இதுபோன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் பள்ளிகள் உள்ளன.
ரூ.50 ஆயிரம் ஊதியம்
அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ரூ.14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. நீங்கள் வந்ததும் ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஊதியம் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த குழந்தைகளை கவனிப்பது சாதாரணமான வேலை இல்லை. சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். நீங்கள் நினைத்ததை செய்யும் முதல்-அமைச்சர். இதனை நிச்சயமாக செய்வீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.