வக்கீல்கள் பாதுகாப்புக்கான சட்டத்தை தகுந்த நேரத்தில் அரசு இயற்றும் -அமைச்சர் ரகுபதி அறிவிப்பு


வக்கீல்கள் பாதுகாப்புக்கான சட்டத்தை தகுந்த நேரத்தில் அரசு இயற்றும் -அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
x

வக்கீல்கள் பாதுகாப்புக்கான தகுந்த சட்டத்தை தகுந்த நேரத்தில் அரசு இயற்றும் என்று சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள், சட்டத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி, அ.தி.மு.க.) :- புதுக்கோட்டை, தூத்துக்குடி, சைதாப்பேட்டை, அரியலூர் ஆகிய இடங்களில் 4 வக்கீல்கள் கொலை செய்யப்பட்டனர். எனவே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதுபோல வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். கச்சத்தீவை மீட்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் அரசு நடவடிகை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் டிஜிட்டல் கோர்ட்டுகள் அமைக்க முயற்சிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சில இடஒதுக்கீடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரும்போது, அரசியல் சாசன சட்டத்தின் 162-ம் பிரிவை பயன்படுத்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதை இந்த அரசும் பின்பற்றலாம். சில சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அமைச்சர் ரகுபதி:- கச்சத்தீவு விவகாரத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் வக்கீல் வைத்து வழக்கு நடத்தப்படும். சட்டசபையில் நிறைவேற்றப்படும் அரசினர் தீர்மானம் என்பது வேறு. சட்ட மசோதா என்பது வேறு. சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கண்டிப்பாக பெறப்பட வேண்டும். அரசினர் தீர்மானத்திற்கு அது தேவையில்லை.

வக்கீல் பாதுகாப்பு சட்டத்தைப் பொறுத்தவரை, ராஜஸ்தானில் உள்ள நிலைமை வேறு. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. மேலும், அது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றவுள்ளது. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டங்களும் வரைவு நிலையில்தான் உள்ளன. வக்கீல் நலனைப் பொறுத்தவரை, தகுந்த நேரத்தில் தகுந்த சட்டத்தை அரசு இயற்றும்.

தளவாய் சுந்தரம் குறிப்பிடும் சில சிறைச்சாலைகள், பராமரிப்பு பணிகளுக்காகவும், பழுது பார்க்கும் பணிகளுக்காகவும் மூடப்பட்டுள்ளன.

அவ்வை சண்முக சாலை

தளவாய் சுந்தரம்:- அ.தி.மு.க. தலைமைக் கழகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலைக்கு வேறு பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு:- அந்த மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இங்கே விவாதிக்க வேண்டாம்.

அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி:- ஆனால் அந்த தீர்மானம் அரசுக்குத்தான் அனுப்பப்படும். அரசுதான் அதற்கான அரசாணையை வெளியிடும்.

செங்கோட்டையன் (அ.தி.மு.க.):- அவ்வை சண்முகம் சாலை என்பதுதான் அ.தி.மு.க.வுக்கான அங்கீகாரமான பெயராக உள்ளது. அந்த பெயரை மாற்றுவது தவறு.

அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன்:- இந்த மன்றத்தில் உள்ள விவகாரம் இது இல்லை என்றாலும், அதுபற்றி விசாரித்து சொல்கிறோம்.

கைதிகள் விடுதலை

ஜவாஹிருல்லா (பாபநாசம், மனிதநேய மக்கள் கட்சி) :- பல்வேறு கட்சிகளின் தொடர்புடைய 37 இஸ்லாமியர்கள் ஆயுள் சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யாதது இஸ்லாமியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் ரகுபதி:- அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி 505 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். நீங்கள் கேட்டுக்கொண்டபடிதான் அதற்காக ஆதிநாதன் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டவர்களில் 15 பேர் விடுதலை பெற வாய்ப்பு உள்ளது.

இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம், அ.தி.மு.க.) :- மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து சட்டப் புத்தகங்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story