கன்டோன்மென்ட் தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாததால் அமைச்சா் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- நீலகிரி மாவட்ட கோர்ட்டு உத்தரவு
கன்டோன்மென்ட் தேர்தல் தகராறு வழக்கு தொடர்பாக, தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீலகிரி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.
ஊட்டி
கன்டோன்மென்ட் தேர்தல் தகராறு வழக்கு தொடர்பாக, தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீலகிரி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.
கன்டோன்மென்ட் வழக்கு
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் தி.மு.க. துணை தலைவருக்கு ஆதரவாக வாக்களிக்க சென்றதாக கூறப்பட்டது.
எனவே அவர்களை அப்போதைய குன்னூர் எம்.எல்.ஏ.வாக இருந்த ராமச்சந்திரன் மற்றும் குன்னூர் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் தி.மு.க. கவுன்சிலர் வினோத் ஆகியோர் அழைத்து சென்ற போது ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலாக மாறிய நிலையில், இந்த களேபரத்தில் கன்டோன்மென்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கண்ணாடி, மேஜைகள் உடைக்கப்பட்டன. மேலும் ஒரு சிலர் தாக்கப்பட்டதால் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
அந்த சம்பவத்தில் அப்போதைய கன்டோன்மென்ட் துணை தலைவராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த பாரதியார் உள்பட அ.தி.மு.க.வினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. தரப்பில் அப்போதைய எம்.எல்.ஏ.வாக இருந்த ராமச்சந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் உரிய முறையில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், அ.தி.மு.க.வை சேர்ந்த பாரதியார் (தற்போது அ.தி.மு.க. பன்னீர்செல்வம் அணியில் நீலகிரி மாவட்ட செயலாளர்) மற்றும் அப்போது தி.மு.க. தரப்பில் துணைத் தலைவருக்காக போட்டியிட்ட வினோத் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி முருகன் உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டார்.