உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் -அமைச்சர் ஆர்.காந்தி அறிவுரை


உள்ளாட்சி பிரதிநிதிகள்  மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் -அமைச்சர் ஆர்.காந்தி அறிவுரை
x

உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசின் திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசின் திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

முதல்வரின் முகவரி திட்டத்தில் வரப்பெற்ற 20 ஆயிரத்து 866 விண்ணப்பங்களில் 13 ஆயிரத்து 931 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 6 ஆயிரத்து 173 விண்ணப்பங்கள் தகுதியின்றி தள்ளுபடி செய்யப்பட்டது. 762 மனுக்கள் நிலுவையில் விசாரனையில் உள்ளது. இ-சேவை செயல்பாடுகளில் கலவை, ஆற்காடு வட்டங்களில் நிலுவைகள் அதிகமாக உள்ளதை உடனடியாக விசாரணை மேற்கொண்டு முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டத்தில் வங்கிக் கணக்குகள் வழங்கி பணம் கிடைக்காத மாணவிகளுக்கு பணம் கிடைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். அதேபோன்று மற்ற அனைத்துறைகளின் செயல்பாடுகளையும் விரிவாக ஆய்வு செய்து நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள், திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள். காலதாமங்களுக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்க அமைச்சர் காந்தி உத்தரவிட்டார்.

மஞ்சப்பை

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது :-

உள்ளாட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென அதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார். உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பது குறித்து என்னிடம் தெரிவித்தால் கலெக்டரிடம் தெரியப்படுத்தி அதற்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கிட வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பையினை பயன்படுத்திட அறிவுறுத்திட வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியாக திகழ வேண்டும். மக்களுக்கான திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இருக்கக் கூடாது. தரமானதாக இருக்க வேண்டும்.

திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது என எண்ண வேண்டாம். மக்கள் உங்களுக்கெல்லாம் ஒரு பொறுப்பினை வழங்கியுள்ளார்கள் என எண்ணி அதனை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய நினைக்கின்றாரோ அதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் 17 பயனாளிகள் மற்றும் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 9 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story