பூலித்தேவன் சிலை, ஒண்டிவீரன் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை


பூலித்தேவன் சிலை, ஒண்டிவீரன் நினைவிடத்தில்   அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே பூலித்தேவன் சிலை, ஒண்டிவீரன் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தென்காசி

சிவகிரி:

தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள மாவீரன் பூலித்தேவன் உருவச்சிலை மற்றும் சிவகிரி வட்டம் பச்சேரியில் அமைந்துள்ள மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடத்தில் நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கலெக்டர் ஆகாஷ் உடன் இருந்தார். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவு மாளிகையை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். சிறப்பு வாய்ந்த இந்த நினைவு மாளிகை செய்தித்துறையின் சார்பில் சரியாக பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சார்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்வுக்காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவீரன் பூலித்தேவனுடன் சுதந்திர போராட்டத்தில் உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர் மாவீரன் ஒண்டிவீரன். அவரின் நினைவுத்தூணையும் பார்வையிட்டுள்ளோம். அதுவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எவ்வாறு மதித்தாரோ, அவ்வழியிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நினைவகங்களும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், நினைவு அரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும், சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து, படிப்படியாக ஆண்டுதோறும் பணிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story