சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு
அருப்புக்கோட்டையில் சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் ஆய்வு
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை பாதிப்புகள் குறித்தும், பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, எவ்வளவு விரைவாக மின் இணைப்புகள் வழங்கப்படும், சேதமடைந்த வீடுகளுக்கு எப்படி நிவாரணம் வழங்குவது என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து ஆலோசனை செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
சேதமடைந்த மின்கம்பம்
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அருப்புக்கோட்டை பகுதியில் மழையால் பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் உடைந்து சேதம் ஆகின. இதையடுத்து கலெக்டர் ஜெயசீலன் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு பணிகளை விரைவுப்படுத்தினார்.
தற்போது 90 சதவீதம் மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு விட்டன. விரைவில் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5,100 உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் ஜெயசீலன், ஆர்.டி.ஓ. அனிதா (பொறுப்பு), மின்வாரிய அதிகாரிகள், ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.