பா.ஜனதாவில் சேரும் ஊழல்வாதிகள் உத்தமர்களாக மாறுவது எப்படி?அண்ணாமலைக்கு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி


பா.ஜனதாவில் சேரும் ஊழல்வாதிகள் உத்தமர்களாக மாறுவது எப்படி?அண்ணாமலைக்கு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி
x
தினத்தந்தி 24 July 2023 12:45 AM IST (Updated: 24 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவில் சேரும் ஊழல்வாதிகள் உத்தமர்களாக மாறுவது எப்படி? என அண்ணாமலைக்கு, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகப்பட்டினம்

பா.ஜனதாவில் சேரும் ஊழல்வாதிகள் உத்தமர்களாக மாறுவது எப்படி? என அண்ணாமலைக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகூர் தர்கா மராமத்து பணி

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா மராமத்து பணிக்காக தமிழக அரசு ரூ.2 கோடி வழங்கி உள்ளது. இந்த நிதியை கொண்டு நாகூர் தர்காவில் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. இதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மை நலத்துறை சார்பில் பள்ளிவாசல்கள் பராமரிப்பிற்காக ரூ.6 கோடியை ஏற்கனவே ஒதுக்கீடு செய்து இருந்தார். இந்த பராமரிப்பு தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

அதே போல் நடப்பு ஆண்டில் பள்ளிவாசல்கள் பராமரிப்பிற்கான நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார்.

ஆய்வு

இவ்வாறு வழங்கப்பட்ட நிதியை எந்த எந்த பள்ளிவாசல்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக இந்த தொகை பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.

தர்காக்கள் பராமரிப்பிற்காக தமிழ்நாட்டில் 3 தர்காவிற்கு ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாகூர் தர்காவிற்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டது. இதில் முன் தொகையாக ரூ.1 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.60 லட்சம் விரைவில் வழங்கப்படும். இன்னும் 60 நாட்களுக்குள் நாகூர் தர்கா பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவுபெறும்.

சொத்துகள் மீட்பு

இதே போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தர்காக்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் வக்பு வாரிய சொத்துகளை மீட்கும் முயற்சியை எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு வாரிய சொத்துகள் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளன. அம்பேத்கர், காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோர் நிலைநாட்டிய சமூக நீதியால் கிடைத்த வாய்ப்பில் உயர் படிப்புகளை படித்தவர் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை. அவர் ஒருவர் மீது குறை சொல்லும்போது தான் எப்படி இருக்கிறோம்? என்று யோசிக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு கேள்வி

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா? என முதலில் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகள் என சொல்லப்படுவர்கள் திடீரென பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் சேரும்போது உத்தமர்களாக மாற்றப்படுகிறார்கள். அது எப்படி? என்பதற்கு அண்ணாமலை பதில் கூற வேண்டும்.

பல்வேறு சோதனைகளை கடந்து நாட்டு மக்களுக்காக சாதனை படைப்பதே திராவிட மாடல். எந்த காலத்திலும் அச்சுறுத்தலுக்கும், சோதனைகளுக்கும் தி.மு.க. அஞ்சாது. அ.தி.மு.க.வை போல் அடிமைகளாக இல்லாமல் வீரத்தோடு சோதனைகளை சந்திப்போம். அதையும் சட்டரீதியாக சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சிறுபான்மை குழு உறுப்பினர் தமீம் அன்சாரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தர்காவில் பிரார்த்தனை

ஆய்வை தொடர்ந்து நாகூர் தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பெரிய ஆண்டவர், சின்ன ஆண்டவர் ஆகிய சன்னதிகள் முன்பு சிறப்பு துவா ஓதப்பட்டது. முன்னதாக தர்கா தலைமை அறங்காவலர் காஜி ஹுசைன் சாஹிப், ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் அமைச்சரை வரவேற்றனர்.


Next Story