அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் முடிவு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.
சென்னை,
மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பணியமர்த்திய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைபோல செந்தில்பாலாஜி தரப்பினரும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும், நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.