அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை..!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் "சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் புலன் விசாரணை செய்வது கடமை.
எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும்? அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினோம். காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில் கொள்ளக்கூடாது என கோர முடியாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி கைதின்போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோர முடியும்.
மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது. பொதுவாக அனைவரது இதயத்திலுமே 40 சதவீத அடைப்பு இருக்கும் என துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு (அதாவது இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு பதில் வாதம் இன்று பதிவு செய்யப்படுகிறது.