அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும்: முன்னாள் அமைச்சர் பேட்டி
அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் என கரூரில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் வழங்கப்பட்ட அமலாக்கத்துறை அளித்த சம்மனை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக வந்த புகார்கள் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி விசாரித்து 2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சின்னசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- செந்தில்பாலாஜி தற்போது அமைச்சராக இருக்கிறார். அதனால் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நேர்மையாக நடக்குமா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவரே பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டம் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.