'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏரி காத்த ராமர்' சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏரி காத்த ராமர் சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு
x

சென்னையில் உள்ள ஏரிகளை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏரி காத்த ராமர் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு புகழ்ந்து பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தொடர்பான மானிய கோரிக்கையில் நேற்று பேசிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்ற ஆட்சியில் அறிவிப்போடு புதைந்த திட்டங்களை தூசி தட்டி, எங்களின் தோள்களை தட்டி துரிதப்படுத்தி மேலும் விரிவுப்படுத்தி வரலாற்று மாநகராய் சென்னையை மாற்றி வரும் இந்திய திருநாட்டின் திசைக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வரைப்படத்தில் தமிழ்நாடு இந்தியாவின் காலடியில் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் உலக நாகரீகத்தின் தொடக்கமே தமிழ்நாட்டின் கீழடியில் தான் இருக்கிறது என்பது வரலாறு. கொளத்தூர் ஏரி, இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி உள்பட 10 ஏரிகளை மேம்படுத்த ரூ.100 கோடி நிதியை ஒதுக்கி தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏரி காத்த ராமர் என்று அழைக்கிறேன்.

அனைவருக்கும் அரசியல் பாடம் படிக்கும் யுனிவர்சிட்டி, அதனால் அவருக்கு (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) உண்டு இந்தியாவை ஆளுகின்ற கெப்பாசிட்டி. இனி இந்த நாட்டிலே டாப் சிட்டி. எங்கள் சென்னை சிட்டி. எத்தனையோ நெஞ்சாலைகளை அமைத்து சாதிக்கும் நம் முதல்-அமைச்சரிடம் ஆலோசனை கேட்பதற்கு தேசிய நெஞ்சாலைகள் எல்லாம் நம் சித்தரஞ்சன் சாலையை வந்தடையும்.

இவ்வாறு அவர் பேசினார்

கோயம்பேட்டில் மருத்துவ சிகிச்சை மையம்

தொடர்ந்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவை கூடத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்படும்.

* ராயபுரம் மூலக்கொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும்.

* கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்படும்.

* சென்னையில் கொண்டித்தோப்பு பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.

* சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பஸ் நிலையங்கள் மேம்படுத்துதல்

* சென்னை அண்ணாசாலை-டேம்ஸ் சாலை-ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் நடை மேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

* கோட்டூரில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டுத்திடல் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* தியாகராயநகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* செனாய் நகரில் 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும்.

* வடசென்னை காசிமேட்டில் உள்ள கடற்கரை பகுதி ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* தண்டையார்ப்பேட்டை பஸ் பணிமனை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.

* கவியரசு கண்ணதாசன் நகர் நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* பெரம்பூர்-முல்லைநகர் பஸ் நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சலவைக் கூடத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறு வளர்ச்சி மேற்கொள்ளப்படும்.


Next Story