கலெக்டர் அலுவலக லிப்டுக்குள் அமைச்சர் சிவசங்கர் சிக்கியதால் பரபரப்பு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலெக்டர் அலுவலக லிப்டில் அமைச்சர் சிவசங்கர் சிக்கி தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கும் விழாவும் நடந்தது.
இதில் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவர் 2-ம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க புறப்பட்டார்.
இதற்காக அவர் எம்.எல்.ஏ. பிரபாகரன், கட்சியினர் சிலருடன் வலது புறத்தில் உள்ள லிப்டில் ஏறினார்.
ஆனால் லிப்ட் தரைதளத்திற்கும், 2-வது தளத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டது. இதையடுத்து, அமைச்சருடன் லிப்டில் ஏறிய கட்சியினர் அலுவலர்களுக்கு செல்போனில் பேசி அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.
10 நிமிடம் தவிப்பு
இதனைதொடர்ந்து, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உள்ளிட்ட அலுவலர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில், டெக்னீசியன் வந்து லிப்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்தார்.
இதையடுத்து அமைச்சர், எம்.எல்.ஏ. சிக்கி தவித்த லிப்ட் மீண்டும் தரைத்தளத்திற்கே இறங்கி வந்து கதவு திறந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 10 நிமிடம் லிப்டில் சிக்கி தவித்து கொண்டிருந்த அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ. பிரபாகரன், கட்சியினர் சிலர் லிப்டை விட்டு வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதன்பிறகு அமைச்சர் சிவசங்கர் 2-வது தளத்தில் நடந்த விழாவிற்கு லிப்டில் செல்லாமல் படிக்கட்டு வழியாக சென்று கலந்துகொண்டார். விழா முடிந்த பின்னர் அவர் லிப்டில் கீழே இறங்காமல் படிக்கட்டு வழியாக இறங்கி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.