நடப்பு நிதி ஆண்டிற்கான கரும்பு அரவை பருவம் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
நடப்பு நிதி ஆண்டிற்கான கரும்பு அரவை பருவத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் கிராமத்தில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கான கரும்பு அரவை பருவ தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ஆலையின் அரவை எந்திரத்துக்குள் கரும்பினை செலுத்தி நடப்பாண்டிற்கான அரவையை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ., ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலரும், தலைமை நிர்வாகியுமான ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், விவசாயிகளின் தோழனாக விளங்கும் தமிழக முதல்-அமைச்சரின் நல்லாட்சியில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022-23 அரவைப் பருவத்திற்கு 12 ஆயிரம் ஏக்கரில் 3 ஆயிரத்து 933 கரும்பு விவசாயிகளால் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 51 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்படவுள்ளது. 16 ஆயிரத்து 200 டன் மொலாசஸ் உற்பத்தி செய்யப்படவுள்ளது. எனவே கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள் வாகன டிரைவர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இந்த அரவை பருவம் சிறப்புடன் நடைபெற தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும், என்றார். பின்னர் அவர் ஆலையில்கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை 13 பேருக்கு வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராம்குமார் மற்றும் அனைத்து கரும்பு விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், வாகன உரிமையாளர் சங்க நிர்வாகிகள், ஆலை தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சிவசங்கர் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மொத்தம் ரூ.55.32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.