100 அடி உயர கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றினார்
ஆம்பூரில் 100 அடி உயர கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. கொடியேற்றினார்.
ஆம்பூரில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் கன்னிகாபுரத்தில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகை தந்த தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக அவருக்கு வழி நெடுகிலும் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், எம்.எல்.ஏக்கள் தேவராஜி, வில்வநாதன் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், அண்ணாதுரை, மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலு விஜயன், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.