'போராட்டம் சென்னையோடு நிற்காது டெல்லியிலும் நடக்கும்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் ‘நீட்’ தேர்வு விலக்கு உறுதி என்றும், ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் சென்னையோடு நிற்காது; டெல்லியிலும் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
சென்னை,
'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
'நீட்' தேர்வால் 21 உயிர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். இது தற்கொலை கிடையாது. இது கொலை. இந்த கொலையை செய்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதற்கு துணை நின்றது அ.தி.மு.க.தான். 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூறுவதற்கு கவர்னர் யார்? நீங்கள் ஒரு தபால்காரர் தான். முதல்-அமைச்சர் சொல்வதை மத்திய அரசிடம் கொடுப்பது தான் உங்கள் வேலை.
கவர்னருக்கு சவால்
நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். கவர்னர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து வெற்றி பெற்றால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்கிறேன்.
'நீட்' தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ? அன்றைக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு விடியல். அதை தி.மு.க. களத்தில் இறங்கி கண்டிப்பாக செய்யும். தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவார்.
அ.தி.மு.க.வுக்கு சவால்
அ.தி.மு.க.வுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அ.தி.மு.க. மாநாட்டில் ஒரு தீர்மானத்தை போடுங்கள். மத்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கூட வர வேண்டாம். உங்கள் இளைஞர் அணி செயலாளரை, மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டு முன்பு போய் உட்காருவோம். அதில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைத்தது என்றால் முழு பெருமையையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அ.தி.மு.க.வால் தான் 'நீட்' தேர்வு ரத்தானது என்று நான் ஏற்று கொள்கிறேன். நீங்கள் தயாரா?.
டெல்லியில் போராட்டம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டி, காங்கிரஸ் ஆட்சியை உட்கார வைத்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வு ரத்தாகும். ராகுல்காந்தி அந்த வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. தலைவரின் அனுமதியை பெற்று விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.