அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருப்பத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அப்போது ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மண்டலவாடி ஊராட்சி பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன், போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் முரளி, செயற்பொறியாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதி தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகர, ஒன்றிய திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கும் இடத்தையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கே செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விளக்கிக் கூறினார்.
இந்த ஆய்வின் போது வாணியம்பாடி நகர தி.மு.க. செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வி.எஸ். சாரதி குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிறப்பான வரவேற்பு
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 17-ந் தேதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட எல்லையான ஆம்பூர் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆம்பூர் தொகுதி சார்பாக அங்கு 100 அடி உயர கம்பத்திலும், வாணியம்பாடியில் 100 அடி உயர கம்பத்திலும் தி.மு.க. கொடி ஏற்றி வைத்து, ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தையும், திருப்பத்தூர் பாச்சல் பகுதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தையும் திறந்து வைக்கிறார். பின்னர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து சேலம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 250 பேர் வீதம் ஆயிரம் பேருக்கு தி.மு.க. சார்பில் பொற்கிழி வழங்குகிறார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.