மாநில பதவிகளுக்கு விண்ணப்பித்த இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்


மாநில பதவிகளுக்கு விண்ணப்பித்த இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
x

மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்த இளைஞர் அணி நிர்வாகிகளிடம் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

சென்னை,

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணிகளுக்கும் மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

அந்த வகையில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இளைஞர் அணியில் மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர், மாவட்ட, மாநகர அமைப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பொறுப்புகளுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் என 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

நேர்காணல்

தி.மு.க.வின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மண்டலங்கள் வாரியாக நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மண்டலம்-1-ல் அடங்கிய மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது.

சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, தென்சென்னை தெற்கு மற்றும் அந்தமான், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களிடம், உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

உதயநிதி ஸ்டாலின்

நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தால் அதுதொடர்பான புகைப்படங்கள், உறுப்பினர்கள் சேர்த்திருக்கிறீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை உதயநிதி ஸ்டாலின் கேட்டார்.

நேற்றைய தினம் நடந்த நேர்காணலில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். அப்போது இளைஞர் அணி துணை செயலாளரும், 1-வது மண்டல பொறுப்பாளருமான தூத்துக்குடி எஸ்.ஜோயல் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

9 மண்டலங்கள்

மண்டலம்-2-ல் அடங்கிய திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 30-ந் தேதி காலை 9.30 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக மண்டலங்கள் வாரியாக 9 மண்டலங்களுக்கும் நேர்காணல் நிறைவடைந்த பின்னர் நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.


Related Tags :
Next Story