ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் கட்டப்படும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு


ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் கட்டப்படும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு
x

ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குளிர்பதன கிடங்கு

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு முடிவு செய்தது.

மேலும் இதற்காக ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு குளிர்பதன கிடங்குக்கான கட்டுமான பணிகளும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. 1,000 டன் காய்கறிகளை இருப்பு வைக்கும் வகையில் இந்த குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்:-

ஒட்டன்சத்திரம், சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கரூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கண்வலி கிழங்கு சாகுபடி நடக்கிறது. இதன் விதை பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

விவசாயிகள் பாதிப்பு

மேலும் இந்த விதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அரசிடம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். அதோடு மட்டுமல்லாமல் மத்திய வேளாண்மைத்துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

மருத்துவ குணம் கொண்ட இந்த கண்வலி விதைகளுக்கு இந்திய அரசிடம் இருந்து தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் வழியாக கண்வலி விதைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கான கட்டுபடியான விலையை பெற்று தர முடியும் என்று மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Next Story